மாவீரர் நாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம்தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுறுத்தும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.


வரலாறு
விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

தமிழீழம்
மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெறுகின்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப் படுகிறார்கள்.



கொடியேற்றுதல்

மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத்தேசியக் கொடி தமிழீழத் தேசியத்தலைவர் வே. பிரபாகரன் அவர்களாலும், மாவீரர் குடும்ப உறுப்பினர்களாலும் தமிழீழத்தில் உள்ள அந்தந்தத் துயிலும் இல்லங்களில் ஏற்றப்படும். புலம்பெயர் நாடுகளில் மாவீரர் குடும்ப உறுப்பினார்களால் நிகழ்வு நடைபெறும் மண்டபத்தில் ஏற்றப்படும்.

கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரை அவர்களால் எழுதப்பெற்ற ஏறுது பார் கொடி ஏறுது பார்... என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.

மாவீரர் நாள் உரை



மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்படுகிறது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலி பரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்றுக் கொண்டோர்ர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்படுகிறது.


மாவீரர் நாள் பாடல்

மாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்த பாடல் புதுவை இரத்தினதுரை அவர்களால் இயற்றப்பட்டது. வர்ணராமேஸ்வரன் அவர்கள் பாடியது. ஈகச்சடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது, அல்லது ஒலிபரப்படுகிறது.[1] இந்தப் பாடல் பின்வருமாறு தொடங்கிறது:



மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!


மாவீரர் குடும்ப கௌரவிப்பு
மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப் படுகிறார்கள். முன்னர் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. தற்போது சில ஆண்டுகளாக வெளிநாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெறுகிறது.

தமிழீழத்தில்
ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப் படுவார்கள்.










புலம்பெயர் நாடுகள்
அதற்கென மாவீரர் வாரத்தின் ஒரு நாளையோ அன்றி மாவீரர் நாளையோ தேர்ந்தெடுத்து அந்த நாளில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப் படுவார்கள்.







கார்த்திகைப் பூ
கார்த்திகைப் பூதேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டு கலாச்சாரத்தின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு.



இந்த வகையிலேயே தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர்.

ஆண்டுவாரியான எண்ணிக்கை

விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் ஆண்டு வாரியான பட்டியல் பின்வருமாறு:

ஆண்டு மாவீரர் எண்ணிக்கை
1982 01
1983 15
1984 50
1985 188
1986 320
1987 518
1988 382
1989 419
1990 965
1991 1622
1992 792
1993 928
1994 378
1995 1508
1996 1380
1997 2112
1998 1805
1999 1549
2000 1973
2001 761
2002 46
2003 72
2004 80
2005 56
2006 1002
2007 860 அக்டோபர் வரை
2008
2009

படை நடவடிக்கைகளின்படி மாவீரர்களின் எண்ணிக்கை
படைநடவடிக்கைகளின்படி வீரச்சாவடைந்த மாவீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

நடவடிக்கை மாவீரர் எண்ணிக்கை
ஆகாயக் கடல் வெளிச் சமர் 604
மணலாறு 233
தவளை நடவடிக்கை 460
கொக்குத்தொடுவாய் 175
இடிமுழக்கம் 181
சூரியகதிர் (ரிவிரச) 438
ஓயாத அலைகள் ஒன்று 315
சத்ஜெய 2 நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த்தாக்குதல்களும் 100
சத்ஜெய 2 நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த்தாக்குதல்களும் 133
பரந்தன் ஆனையிறவு 193
வவுணைதீவு 103
கிளிநொச்சி, பரந்தன் மீதான ஊடுருவித் தாக்குதல் 300
ஓயாத அலைகள் இரண்டு 403
ஜெயசிக்குறு படைநடவடிக்கையும் அதன்மீதான எதிர்த்தாக்குதலும் 2146
ஓயாத அலைகள் மூன்று 1336
ஓயாத அலைகள் நான்கு 181
தீச்சுவாலை முறியடிப்புச் சமர் 141

நன்றி : கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா

பழியைத் துடைக்க பகீரதப் பிரயத்தனம் கலைஞரின் முயற்சி பலிக்க வாய்ப்பில்லை

ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழக முதல்வர் கலை ஞர் கருணாநிதியின் "அங்கிடுதத்தி"த் தனத்தால் அவ ருக்குத் தீராப்பழி ஏற்பட்டுவிட்டது. "உலகத் தமிழினத் தின் தலைவர்" என்று தன்னைத் தமிழினம் மதிக்கும் என்றுதான் இதுகாறும் கருதி வந்தார் கலைஞர் கருணா நிதி. ஆனால் ஈழத் தமிழர்கள் வரலாற்றில் பேரவலத்தை மிக மோசமான போரியல் அழிவுகளை சந்தித்துக் கொண்டிருந்தபோது, தன்னுடையதும் தனது குடும்பத் தினதும் சுயநல அரசியலுக்காகத் தமிழர்களை நட்டாற்றில் விட்டு, பெரும் பழியைச் சுமந்து கொண்ட அவரை "தமிழினத்தின் தலைவிதி" என்று நொந்து சபிக்கும் நிலையிலேயே உலகத் தமிழர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசியல் அணிகள் தொடர்பான கணக்கு வழக்குகள், கூட்டல் கழித்தல்கள், இன்றைய நிலையில் கலைஞர் கருணாநிதியின் காட்டில் நல்ல மழை என்ற நிலைமையை ஏற்படுத்தினாலும் ஈழத் தமிழர்களை அந்தரிக்க விட்டு அதற்காகத் தமது அரசியலில் "அந்தர் பல்டி" அடித்த கலைஞரை உலகத் தமிழினம் எந்தக் கட்டத்திலும் மன்னிக்காது என்பது அவருக்கு நன்கு தெரியும்; புரியும்.

எப்படியும் தமது இறுதிக் காலத்துக்கு முன்னர் அந்தப் பழியைத் துடைத்து அழித்துவிடலாம் என்ற நப்பாசை யில் அவ்வப்போது சில ஆரவாரங்களைப் பண்ணுவது இவரது அரசியல் தகிடுதத்தமாக இருந்து வருகிறது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சர்வதேச செந்தமிழ் மாநாடு என்றெல்லாம் "கப்ஸா"பண்ணிப் பார்த்தார். ஈழத் தமிழர் விடயத்தில் தம்மீது விழுந்துள்ள பழியைத் துடைப்பதற்கு அவர் நடத்தும் கபட நாடகமே இந்த மாநாடு என்பது பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டமையை அடுத்து சற்று அடங்கிப்போனார்.

இப்போது "நம் மௌன வலி யாருக்குத் தெரியப் போகின்றது?" என்ற தலைப்பில் ஈழத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்து ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரவலத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவரையும் குற்றம் சுமத்தி அவர் வெளியிட்ட அறிக்கையும் இதேமாதிரியில் விவகாரத்தைத் திசை திருப்பும் எத்தனமின்றி வேறில்லை.

இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்து கொண்டிருந்தபோது கொன்றொழிக்கப் பட்டுக் கொண்டிருந்தபோது அத்தகைய கொழும்பு அரசின் அத்துமீறிய போக்கை ஆதரித்து, அங்கீகரித்து, அதற்கு உதவி, ஒத்தாசை வழங்கி, உறுதுணையாகச் செயற்பட்டது இந்திய மத்திய அரசு புதுடில்லி நிர்வாகம்.

இலங்கை விவகாரத்தில், அப்படி இந்திய மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளே தனது மாநில அரசின் முடிவும் கூட என்றும் பகிரங்கமாக அறிவித்ததன் மூலம், இலங்கையின் தமிழின அழிப்புக்குத் துணைபோன, இந்திய மத்திய அரசுக்கு முழு அளவில் முண்டு கொடுத்து, அந்த மத்திய அரசின் பழி பாவத்தில் தன்னையும், தனது இயக்கத்தையும், கட்சிக்காரர்களையும் பங்குதாரர் ஆக்கிக் கொண்டார் கலைஞர்.

இப்போது அதிலிருந்து வெளியே வர பழியைத் துடைக்க பகீரதப் பிரயத்தனம் பண்ணுகின்றார். ஆனால் அவை எல்லாம் எடுபடாமல், அவரின் கோமா ளித்தனங்களாக அர்த்தம் பண்ணப்படுகின்றமைதான் அவருக்கு இன்று நேர்ந்துள்ள அவலமாகும்.
இலங்கைத் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட போது, அதற்குத் துணைபோன புதுடில்லி ஆட்சிப் பீடத்துக்கு முண்டு கொடுத்து, தனது அரசியல் பிழைப்பை லாபகரமாக நடத்திய கலைஞர், அச்சமயம் மறுபக்கத்தில், மனித சங்கிலிப் போராட்டம், தமிழக எம்.பிக்கள் கூண்டோடு இராஜிநாமா என்ற கபட நாடகம், மூன்று மணி நேரம் நடத்திய சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்ட நடிப்பு, இலங்கையில் யுத்த நிறுத்தம் வந்துவிட்டது என்ற பித்தலாட்ட அறிவிப்பு, பல கட்சிப் பிரதிநிதிகளையும் புதுடில்லிக்குக் கூட்டிச் சென்று இந்திய மத்திய அரசை மிரட்டுவது என்ற கோணங்கித்தனம் என அவ்வப்போது அடித்த அரசியல் "பல்டி"கள் அல்லது "ஸ்டண்ட்"கள் பலப்பல.
அவை எவையுமே அப்போதும் சரி, பின்னரும் சரி எடுபடவேயில்லை என்பதுதான் யதார்த்தம்.

இப்படித் தீராப்பழி தம்மீதும், தமது குடும்பம் மீதும் விழுந்திருப்பதால், அதையெண்ணி இப்போதாவது நொந்து அழுவதற்கான மனச்சாட்சியை அவருக்கு இறைவன் கொடுத்திருக்கின்றான் போலும். அதனால்தான், தமது பிந்திய இந்த அறிக்கைக்குள் வேறு ஏதோ உளறிக்கொட்டியிருந்தாலும் கூட, அதன் தலைப்பை "நம் மௌன வலி யாருக்குத் தெரியப் போகின்றது?" என்று வரைந்திருக்கின்றார் அவர்.

வன்னியிலே தமிழினம் கதறக் கதறக் கொன் றொழித்து அழிக்கப்பட்டபோது, அதன் கதறலை செவி மடுக்கத் தவறி அதன் அவலத்தை உணரத் தவறி சுயலாப அரசியல் நடத்திய இத்தகைய தலைவர்களுக்கு உண்மையில் மனச்சாட்சி இருந்து, அதில் ஏற்படக்கூடிய மௌனவலியை உணரும் பக்குவம் அவர்களின் பிரக்ஞைக்கு உண்டா என்பது சந்தேகமே. அப்படி அவர் களுக்கு மௌன வலி நேர்ந்தாலும் அதைத் தமிழினம் உணர்ந்து, புரிந்து கொள்வதற்கு அதில் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.

17 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தேர்தலைச் சந்திக்க மஹிந்தர் தயாரா?


"ஆடு நனைகின்றது என ஓநாய் அழுததாம்!" இந்தப் பேச்சு மொழி போல இருக்கின்றது நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி மாநாட்டில் அக்கட்சியின் தலைவ ரும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியுமான மஹிந்த ராஜ பக்ஷ, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குறித்து அதன் பெயர் குறிப்பிடாமல் பூடகமாகத் தெரிவித்த கருத்து.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பிரதான கட்சி, ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்காக பல சிறிய கட்சி களின் பின்னாலும், தரப்புகளின் பின்னாலும் ஓடித்திரிவது கவ லைக்குரியது, வேதனைக்குரியது என்ற சாரப்பட அவர் கூறிய கருத் துத்தான் ஆடு நனைவது குறித்து ஓநாய் கவலைப்படுகின்ற பேச்சுமொழியை நமக்கு நினைப்பூட்டி நிற்கின்றது.
ஒரு ஜனநாயக நாட்டில் செயல்திறன் மிக்க எதிர்க்கட்சியின் அவசியம் குறித்து இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது இங்கு இல்லாமை குறித்து நீலிக்கண்ணீரும் வடித் திருக்கின்றார். நல்ல கேலிதான் போங்கள்........!

இந்த நிலைமைக்கு யார் பிரதான காரணம்? யார் சூத்திர தாரி? எதிர்க்கட்சிகளும் அவற்றின் தலைவர்களுமா? அல்லது பதவி ஆசை காட்டி ஆள்களை கட்சி தாவ வைக்கும் கைங்கரி யத்தை இலங்கையின் சரித்திரத்திலேயே ஒப்புயர்வற்ற நிலை யில் கனகச்சிதமாக சாதனையாகச் செய்து முடித்திருக்கும் ஜனாதிபதியா?

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு இன்று சுமார் நூற்றிப்பத்து அமைச்சர்கள். "பல்டி" அடித்தவர்கள் எல் லோருக்கும் "அமைச்சர் பதவி" என்ற எலும்புத்துண்டை வீசும் ஜனநாயக அரசியலின் கீழ்த்தரத்தைக் குடைந்தெடுத்து அரி யணை ஏற்றிய "சரித்திர நாயகர்"யார்?

எந்தப் பிரதான எதிர்க்கட்சியைத்தான் இதில் தப்பவிட்டார் அவர்? ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்று எல்லாவற்றையுமே "பதவி ஆசை" என்ற அஸ்திரத்தைப் பயன்படுத்தி, துண்டுபட வைத்த சீமான் அவரன்றோ.....?

ஏதோ இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் அதில் சிக்காமல் எஞ்சி நிற்கின்றது. அதற்கும் காரணம் உண்டு. முன்னர் நெல்லிக்காய் மூடையின் வாய் திறக்காமல் வன்னியில் போடப்பட்ட முடிச்சு அவர்களைச் சிதறவிடாமல் வைத்திருந் தது. இப்போது முடிச்சு அவிழ்ந்துவிட்டதான நிலைமை தோன்றினாலும், சாக்கை விட்டுச் சிதறினால் மிக விரைவில் வரக்கூடிய பொதுத் தேர்தலில் காணாமல் போய்விடுவோம் என்ற பீதியில் நெல்லிக்காய்களே மூடைக்குள் சிதறாமல் தாமாக அடங்கிக் கிடக்கின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகளைச் சார்ந் தோருக்கெல்லாம் "அமைச்சுப் பதவி" என்ற ஆசையைக் காட்டி விலைபேசி அக்கட்சிகளை உடைத்தமை மட்டுமல்லா மல், இலங்கைத் தீவில் நீதி, நேர்மையான ஆட்சி மற்றும் சுதந் திரமான தேர்தல்களுக்கான அடிப்படையாக விளங்கும் அரச மைப்பின் 17 ஆவது திருத்தத்தையே நடைமுறைப்படுத் தாமல் இழுத்தடித்து வருகின்றார்.

அப்படிச் செய்துகொண்டு, ஜனநாயகத்தில் பிரதான எதிர்க்கட்சிகளின் பங்களிப்புக் குறித்து "ஆடு நனைவதுபோல" அவர் கவலைப்படுவது அர்த்தமற்றது; அபத்தமானது.
பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. ஜனாதிபதித் தேர்த லுக்கான பொது வேட்பாளராக, முப்படைகளின் சிரேஷ்ட அதி காரி பதவியிலிருந்து இன்று ஓய்வுபெறும் ஜெனரல் சரத் பொன் சேகாவை நிறுத்துவதற்கு ஓடித்திரிவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி மாநாட்டில் பெயர் குறிப்பிடாமல் நையாண்டி செய்துள்ள போதிலும், ஐ.தே.க. தலைமையின் அந்த முடிவு ஜனாதிபதியைக் கலங்க வைத்திருக்கின்றது என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிகின்றது.

நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாட்டில் வைத்துத்தான், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே நடத்துவதா என்பது பற்றிய தமது முடிவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார் எனப் பல தரப்பிலும் கூறப்பட்டு வந்தது. ஆனால் ஜனாதிபதி அத்தகைய அறிவிப்பை விடுக்க வில்லை. அந்த விவகாரத்தைத் திறந்த விடயமாக அவர் விட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்தும் எண்ணத்தை அவர் அங்கு அறிவிக்காமல் கோடி காட்டாமல் விட் டமைக் குப் பல்வேறு காரணங்கள் ஊகமாகக் கூறப்படுகின்றன.
ஜனாதிபதித் தேர்தல் பற்றிய அறிவிப்பை சோதிட சாஸ் திரக் கணிப்புகளின்படி சுபநேரத்தில் விடுக்க அவர்காத் திருக்கின்றார். ஏழு, எட்டு நாட்களில் அந்த அறிவிப்பு வரும் என்கின்றனர் ஒரு சாரார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே நடத்துவதற் கான உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுப்பதற்கான அதி காரம், அவரது தற்போதைய பதவிக் காலத்தின் நான்கு ஆண் டுகள் முடியும்போது அதாவது இன்னும் சில தினங்களில் அவருக்கு வரும். அப்போதே அந்த அறிவிப்பை அவர் விடுப்பார் என்கின்றனர் வேறு சிலர்.

ஆனால், அத்தேர்தலை முற்கூட்டியே நடத்தி வெற்றி வாகை சூடும் உறுதியோடு இருந்த ஜனாதிபதிக்கு, எதிர்க்கட் சிகளின் பொதுவேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவின் திடீர் அரசியல் எழுச்சி கிளம்பியிருக்கின்றமை பெரும் அதிர்ச் சியைத் தந்துள்ளது. அதனால் தமது முன்னைய முடிவு குறித்து மீள் பரிசீலனை செய்வதற்காக அவர் அத்தேர்தல் பற்றிய அறிவிப்பை விடுக்கும் முன்னைய திட்டத்தில் இருந்து சற்றுப் பின்வாங்கியிருக்கின்றார் என்கின்றன எதிர்க் கட்சி வட்டாரங்கள்.

இதில் எதுவும் உண்மையாக இருக்கலாம். ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாநாட்டில், "ஜனா திபதித் தேர்தலா, பொதுத் தேர்தலா, எது முதலில் நடத்தப்பட வேண்டும்?" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எழுப்பிய கேள்விக்கு, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான அவரது கட்சி உறுப்பினர்கள் "ஜனாதிபதித் தேர்தலே!" என்று ஏக குரலில் பலத்த ஆரவாரத்தோடு பதிலளித்த பின்னர், அத் தேர் தலை முற்கூட்டியே அறிவித்து நடத்தாமல், அவர் பின் வாங்க முடியாது என்பது திண்ணம்.
அப்படிப் பின்வாங்குவாராயின், எதிர்க்கட்சிகளின் பொது வேட் பாளர் என்ற எழுச்சி கண்டு அவர் அதிர்ந்து போய்விட்டார் என்று தான் அர்த்தம்.

அதேசமயம், நீதியான நியாயமான சுதந்திரமான சுயாதீனமான தேர்தல்களுக்கு வழிசெய்யும் அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்திக்கொண்டு அத்தகைய தேர்தலுக்கு அவர் செல்வாராயின், ஜனநாயகக் கட்டமைப்பில் எதிர்க்கட்சிகளில் பங்குபணி தொடர் பாக இப்போது "தத்துவம்" பேசும் அவருக்கு, அதற்கான தகுதி உள்ளதாகக் கருதமுடியும். அதற்கு அவர் தயாரா?

வரவிருக்கும் நவம்பர்27... தரவிருக்கும் தகவல்...எதிர்பார்ப்புக்கள் என்னாகும்...???

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள் , மாவீரர் வாரத்தின் இறுதி நாள்; தாயக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனிதக் கல்லறைகளில் சிரந்தாழ்த்தி, மலர்தூவி, ஒளிதீபமேற்றும் உன்னதநாள்; நம் தாயக விடுதலைக்காக இதுவரை நாம் இழந்தவற்றை மீள்நினைத்து இழந்த மாவீரர்களின் இலட்சியக் கனவினை ஈடேற்ற அவர் வழிச்சுவடு தொடருவோம் என உறுதியெடுத்துக் கொள்ளும் வீரநாள்; ஈழத்தமிழர்கள் அனைவரிற்கும் ஒரு எதிர்பார்ப்பினைக் கொடுக்கும் நாள்; அன்றுதான் நம் தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்களை அவரது உரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் அரிய நாள். அந்நாளில், ஒட்டுமொத்த உலகமுமே தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் என்ன சொல்லப் போகின்றார் என ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்.

ஆனால் இந்த வருடம், தேசியத்தலைவரின் உரையில் என்ன விடயம் இருக்கும் என்பதைவிட தேசியத்தலைவர் அதிமேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உரை நிகழ்த்துவாரா???... இல்லையா??? என்ற கேள்வியுடன்கூடிய எதிர்பார்ப்பே எல்லோர் மத்தியிலும் காணப்படுகின்றது. ஏனெனில், கடந்த மே மாதம் 17ஆம் திகதி முள்ளிவாய்க்கால் துயரச்சம்பவங்களின் பிற்பாடு, தேசியத்தலைவர் அவர்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்குரிய ஐயப்பாடுகளுக்கும் கேள்விகளுக்கும் இன்றுவரைக்கும் தீர்க்கமான,தெளிவான எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. அன்றைய சம்பவத்தின்போது அங்கு இருந்தவர்களால்கூட எதையுமே உறுதியாகக் கூற முடியாதளவுக்கு இப்பொழுதும் அவ்விடயம் மர்மமாகவே தொடர்கின்றது.
இந்த நிலையிலேயே, இம்முறை தலைவர் அவர்களால் வருடந்தோறும் நிகழ்த்தப்படும் மாவீரர்தின உரை நிகழ்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை. தமது மான்புமிகு தலைவரின் மீள்வரவுக்காக... அவர் "மீண்டும் வருவார்" என்ற நம்பிக்கையுடன் முழுத் தமிழினமுமே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.



எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள் எதிர்பார்க்கப்படுபவையேயன்றி உறுதியாகக் கூற முடியாதவை. அந்தவகையில், எதிர்வரும் மாவீரர் தினத்தன்று தலைவர் அவர்களின் உரை நிகழ்த்தப்படுமா என்பதும் உறுதியாகக் கூறமுடியாத ஒரு விடயமாகவே காணப்படுகின்றது. இந்த விடயம் இப்படியே இருக்க, தலைவரின் உரை நிகழ்த்தப்பட்டால் அல்லது நிகழ்த்தப்படாவிட்டால் என்ற இரு நிலைமைகளைப் பற்றியும் அதனாலான விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது பற்றியும் அவசியம் ஆராயவேண்டியுள்ளது.

தேசியத் தலைவர் தோன்றி தனது உரையை நிகழ்த்துவாரானால், தமிழர்களுக்கு அதைப்போன்றதொரு மிக மகிழ்ச்சியான விடயம் வேறெதுவுமே இருக்கமுடியாது. இவ்வளவு நாட்களாய் மனமுடைந்துபோய் சோர்ந்துபோய் இருந்தவர்கள் அனைவரையும் அதன்பின் மீள எழுச்சிகொள்ள வைப்பதாக அது அமையும். ஒட்டுமொத்த தமிழர்களும் புத்துணர்ச்சியோடு தலைவன்பின் அணிவகுத்து நிற்கத் தயாராவார்கள். தலைவன் வழிநின்று அடுத்தகட்ட விடுதலைப் போராட்டங்களை மிக எழுச்சியோடு தொடர முனைவார்கள். சிங்கள தேசத்திற்கு அது கலக்கத்தினைத் தோற்றுவிக்கலாம். சர்வதேசத்திற்கு ஆச்சரியத்தினை உருவாக்கலாம். ஈழவிடுதலைப் போராட்டம் மீண்டும் ஒரு முன்னேற்றகரமான பரிமாண மாற்றத்தினைப் பெறலாம். இவையெல்லாம் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மீண்டும் தோன்றினால் சாத்தியப்படக்கூடிய விடயங்களாக அமையக்கூடியவை.
ஆனால் எதிர்மாறாக, வரவிருக்கும் மாவீரர் தினத்தன்று தேசியத்தலைவர் தோன்றவில்லையாயின், தற்பொழுதும் மனந்தளராமல் இருக்கும் பலரும் மனமுடைந்து சோர்வடைந்து போகக்கூடிய பாதகமான சாத்தியப்பாடுகளும் காணப்படுகின்றன. கடந்த மே 17 தொடங்கி இன்றுவரை தொடரும் மர்மமான கேள்விகளுக்கு தாமாகவே பதில்களை கண்டுகொள்ள எத்தனிப்பார்கள். தலைவர் வருவார் என நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அந்த ஏமாற்றம் பெரும் மனமுடைவினைக் கொடுக்கலாம். இதன் காரணமாக இனிவரும் காலங்களில் புலம்பெயர் தேசங்களில் தொடரப்படும் மக்கள் போராட்டங்களில் ஒரு தொய்வுநிலைகூடத் தோன்றலாம். பல தரப்பினராலும், புலிகளின் தலைவர் இல்லை என்ற முடிவுகள் எடுக்கப்படலாம். இது இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பெரும் தாக்கத்தினை உண்டுபண்ணக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன .இவ்வாறாக, பல பாதகமான விளைவுகள் தலைவர் அவர்கள் தோன்றாதவிடத்தில் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றன.

மொத்தத்தில், வரவிருக்கும் மாவீரர் தினத்தில் தேசியத்தலைவர் தோன்றி உரை நிகழ்த்த வேண்டும் என்பதே நம் எல்லோருடையதும் அங்கலாய்ப்பாய் இருப்பதனை உணரமுடிகின்றது. மேலோட்டமாகப் பார்க்கும் போதும் அதனாலான விளைவுகளை மேலோட்டமாக நோக்கும்போதும் தேசியத் தலைவர் தோன்றினால் மேலே குறிப்பிட்டதைப் போன்று அனைத்து விதத்திலும் நன்மைகளே என்று தோன்றலாம்.
ஆனால் நாம் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, இன்றைய நிலைமையில் தலைவர் அவர்கள் தோன்றுவதற்கான புறச்சூழ்நிலைகள் உருவாகவில்லை என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளை அறிந்திருந்தும்,அவர்களின் போராட்டம் நியாயமானது என்பதனை உணர்ந்திருந்தும் சர்வதேசம் தமிழர்களின் தாயக விடுதலைப் போராட்டம் சிதைக்கப்படுவதற்கு சிங்களத்திற்கு தனது முழுமையான ஆதரவினைக் கொடுத்திருந்தது. ஏனெனில், தமிழர்களுக்காக போராடிய புலிகளை சர்வதேசம் அச்சத்துடனேயே நோக்கியது. அவர்களின் அபரிதமான வளர்ச்சியும், செயற்திறனும், கட்டமைப்புக்களும் அவர்களை அச்சங்கொள்ள வைத்தன. அத்தோடு நாடுகளுக்கிடையிலான பிராந்திய வல்லாதிக்கம் மற்றும் வர்த்தகப் போட்டிகளும் சேர்ந்துகொண்டன. இவற்றின் காரணமாகவே, புலிகளுக்கு பயங்கரவாத முத்திரையைக் குத்தி, தடைகளை விதித்து அவர்களை அழிப்பதற்குரிய வழிமுறைகளை தேடிக்கொண்டிருந்தது. வன்னி மீதான போரினை சாதகமாக பயன்படுத்தி தமது நீண்ட நாள் கனவினை நிறைவேற்றிக் கொண்டது சர்வதேசம். தமிழருக்கான தீர்வு என்பதனை விட புலிகளை அழிக்கவேண்டும் என்பதிலேயே சர்வதேசம் அதிக கரிசனை கொண்டிருந்தது என்பதனை கடந்த வரலாறு நமக்கு மிகநன்றாகவே புரியவைத்திருக்கின்றது.

வன்னிப் போரின் பிற்பாடு புலிகளின் செயற்பாடுகள் அற்றுவிட்டதான நிலையில், சர்வதேசம் தற்போது தமது கவனத்தினை "தமிழர்களின் தீர்வு" என்பதன்மீது அக்கறைகொள்வதாக காட்டிக்கொள்கின்றது. அவை எந்தளவுக்கு உண்மைத் தன்மையோடு இருக்கும் என்ற சந்தேகம் இருந்தாலும், இவ்வாறான சர்வதேச மாறுதல்கள் தற்போதைய நிலைமையில் அவசியமானவையாகவே கருதப்படுகின்றன. இவற்றின் விளைவாக தற்பொழுது சிங்கள அரசு பெரும் அரசியல்,பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு வருவதனையும் சர்வதேசத்தின் நெருக்குதல்களுக்கு முகம்கொடுத்து வருவதனையும் நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்தியாவின் மெளனம் மற்றும் சீனா, ரஷ்யாவின் சிறீலங்கா ஆதரவுக் கொள்கை என்பன பாதகமானதாக இருந்தாலும் செல்வாக்குமிக்க மேற்குலக நாடுகளின் மாற்றங்கள் ஈழத் தமிழர்களிற்கு சாதகமானதாகவே அமைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் தொடந்தால் அவை எதிர்காலத்தில் மிகச்சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

ஆயினும், சர்வதேசம் புலியெதிர்ப்புக் கொள்கையிலிருந்து இன்னும் விடுபடவில்லையென்பது, புலிகள் மீதான தடைகளை அவர்கள் அகற்றாமல் இருப்பதிலிருந்தும்; ஆயுதப் போராட்டம் மீண்டும் தொடங்கலாம் என்ற அச்சம் சர்வதேச முக்கியஸ்தர்களினால் வெளியிடப்பட்டதிலிருந்தும் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என்பதனை சர்வதேசம் இன்னும் ஏற்கத் தயாராகவில்லை. தமிழர்களின் பிரச்சினையினையும் அவர்களுக்காக புலிகள் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தினையும் சர்வதேசம் வேறுபடுத்தியே பார்க்கின்றது. தலைவரின் மீள்வரவென்பது புலிகளின் மீள்தோற்றமேயாகும். இந்நிலையில் தலைவர் அவர்கள் வெளிப்பட்டால் சர்வதேசம் தற்போது கொண்டிருக்கும் தமிழர் சார்பான ஆதரவுக் கொள்கையை கைவிட்டு மீண்டும் புலிவேட்டைக்கு புறப்பட்டுவிடும். இதனால் புலிகளின் மீள்தோற்றம் முளையிலேயே கிள்ளியெறியப்படும் அபாயமும் உருவாகும். ஒரு பாரிய பின்னடைவின் பிற்பாடு, தற்போதைய சர்வதேசப் பின்னணியில் புலிகளின் வெளிப்பாடு என்பது தற்போதைக்கு சாதகமாக அமையாது என்பது தற்போதைய யதார்த்தநிலை.
அத்தோடு, முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப்போராட்டம் தொடர்ந்திருந்தபோதும், சர்வதேசத்தின் பார்வையில் ஏற்படாத தமிழர் சார்பான மாற்றம் தற்பொழுது ஏற்பட்டுவருகின்றது என்றே சொல்லவேண்டும். சர்வதேச மட்டத்தில் இத்தகைய மாற்றம் ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு அது ஆதரவினை அளிக்கக்கூடியதான சாத்தியங்கள் ஏற்படக்கூடும்.

இதனால் தீர்க்க தரிசனமிக்க தலைவர் அவர்கள் எல்லாவற்றையும் கருத்திற்கொண்டு மீண்டுமொரு சாதகமான நிலைமையில் அல்லது தீர்க்க தரிசனமிக்க அவரது கணிப்புப்படி.. தகுந்த சமயத்திலேயே தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் என்றே எதிர்பார்க்கலாம். அவர் வெளிப்படுவதற்கான புறச்சூழ்நிலைகள் இன்னும் உருவாகாத நிலையில் வருகின்ற மாவீரர்தினம் எவ்வாறு அமையப்போகின்றது?... எவ்வாறு அமைய வேண்டும்?? .... என்பது பற்றிப் பார்ப்போம்.

"மாவீரர் தினம்" என்பது தமிழீழ வரலாற்றில் என்றுமே முக்கியத்துவமிக்க, தமிழரின் வாழ்வோடு ஒன்றிப்போய்விட்ட தினம். இன்னும் எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆனாலும் கடைசி ஈழத்தமிழன் உயிர்வாழும் வரைக்கும் நினைவு கூரப்படும் இந்த புனித நாள். தன் இனத்துக்காக தம் சுய ஆசாபாசங்களை மறந்து தம் இன்னுயிரையும் துறந்த தியாகத்தின் சிகரங்களை நினைவுகூர நமக்கு வரமாக கொடுக்கப்பட்ட மாவீரர் தினத்தினை இம்முறை ஒரு வித்தியாசமான உணர்வுகளோடு, எதிர்பார்ப்புகளோடு எதிர்கொள்ளக் காத்திருக்கின்றது ஒட்டுமொத்த தமிழினமும்.

நம் தேசத்தின், நம் இனத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களின் கல்லறைகள் இன்று மண்ணோடு மண்ணாக்கப்பட்டிருக்கின்றன. அவை இருந்த அடையாளமே தெரியாமல் துடைத்தழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாவீரச் செல்வங்கள் நமது பிள்ளைகள், நமது சகோதரங்கள்,நமது உறவுகள். இவர்களின் தியாகங்களை வெறும் வார்த்தைகளால் விபரிக்கமுடியாது. தம் வாழ்வையும் உயிரையும் தன் இனத்துக்காகவே கொடுத்த வீரபுருஷர்கள் இவர்கள்.தமிழன் என்று சொல்லி நம்மை தலைநிமிர வைத்தவர்கள். இம்மாவீரர்களின் நினைவுநாளை எழுச்சியோடு அனுஷ்டிக்கவேண்டியது ஒவ்வொரு தமிழனதும் தார்மீகக் கடமை.
ஆனால் இக்கடமை என்பதனையும் தாண்டி, இம்முறை நாம் மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்கப்போகும் முறையினால் சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் பலமான செய்தியொன்றினை சொல்லவேண்டியுள்ளது.

அதாவது, சர்வதேசத்தாலும், சிங்களத்தாலும் "பயங்கரவாதிகள்" என பொய்முத்திரை குத்தப்பட்ட விடுதலைப் புலிகள், நம் மாவீரர்கள் ஏதோ விண்வெளியிலிருந்து குதித்தவர்கள் அல்லர். நமது சொந்த உறவுகள். தம் இனத்தின் அவலத்தினைக் கண்ணுற்று தாங்கமுடியாமல் போராட புறப்பட்டவர்கள். நமக்காகவே தம்முயிரையும் துச்சமென நினைத்து தியாகம் பண்ணியவர்கள். அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை. நம் விடுதலைக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள். அவர்கள் சுமந்த விடுதலைக் கனவைத்தான் நாமும் சுமக்கின்றோம். தமிழீழத் தாயகம் என்பது புலிகளின் தாகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஈழத் தமிழரினதும் தாகமும் வேட்கையும் அதுதான் என்பதனை அறுதியிட்டுக் கூறுவோம்.

இதுவரை நாட்களும் நாம் தொடர்ந்த போராட்டங்கள்தான் சர்வதேச மட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றது. மாவீரர் தினத்தினை நாம் உணர்வெழுச்சிபூர்வமாக அனுஷ்டிப்பதன்மூலம் சர்வதேசத்திற்கு பல விடயங்களினைப் புரியவைக்க முடியும்.
தலைவரின் வருகை என்ற விடயத்தில் நாம் தற்போதைக்கு கவனத்தினைச் செலுத்தாது, அவர் வழிகாட்டிய வழி தொடர்ந்து நம் வரலாற்றுக் கடமையை சரிவரத் தொடர்வோம். புலிகள் இல்லாத வெற்றிடத்தினை நாம் நன்கே உணர்கின்றோம். அவர்களின் மீள்வரவென்பதும் நமது கைகளில் உள்ள நிலையில் சர்வதேசத்தின் நிலைப்பாடுகளில் சாதகமான மாற்றத்தினைக் கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதனை உணர்ந்தவர்களாய் இம்முறை மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்கத் தயாராவோம்! மாவீரர்கள் சுமந்த இலட்சியக்கனவினை நிறைவேற்றும்வரை ஓயாமல் போராடுவோம் என உறுதியெடுப்போம்!


"மாவீரர்களை நாம் புதைக்கவில்லை... விதைத்திருக்கின்றோம்"

-தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்-

-பருத்தியன்-